search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் தலைமுடி காணிக்கை"

    திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. #tirupatitemple

    திருமலை:

    திருப்பதியில் தினமும் 30 முதல் 34 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலைமுடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    திருமலையில் இதற்காக 18 இடங்களில் கல்யாண கட்டா உள்ளது. மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் தலைமுடியை ஒவ்வொரு மாதமும் தேவஸ்தானம் இ-டெண்டர்கள் மூலம் ஏலம் விடுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.11 முதல் 12 கோடி வரை தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    கல்யாண கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்துவோருக்கு, அங்கேயே குளிக்கவும், உடை மாற்றும் அறைகளையும் தேவஸ்தானம் கட்டிக் கொடுத்துள்ளது.


    ஆதலால், ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில், தலைமுடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் கீழே உட்காருவதால் சங்கடமாக உள்ளதாகவும், குறிப்பாக, மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியோர், பெண்கள் ஆகியோர் கீழே உட்கார்ந்து தலைமுடி காணிக்கை செலுத்த சங்கடப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கல்யாண கட்டாவில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதியோர், மாற்று திறனாளிகளுக்காக நாற்காலி வசதி செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி, நேற்று முதல் கல்யாண கட்டாவில் நாற்காலி வசதி அமைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் கூடுதல் நாற்காலிகள் அமைக்கப்படும் என புட்டா சுதாகர் யாதவ் உறுதியளித்தார்.

    தற்போது ஒவ்வொரு கல்யாண கட்டாவிலும் 5 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.  #tirupatitemple

    ×